தஞ்சை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளுள் ஒன்று பூச்சந்தை சாலை. இந்த சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் இதனை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி தற்போது 15 அடி சாலையாக உள்ள இந்த சாலை 30 அடி சாலையாக 1 கி.மீ. நீளத்திற்கு அகலப்படுத்தப்படுகிறது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் செலவில் இந்த சாலை அகலப்படுத்தப்படுகிறது. மேலும் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகாலும் அமைக்கப்படுகிறது.
இதற்காக இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. இதனால் இங்கு ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்துள்ளவர்கள், சாலையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கடைகடையாக சென்று பொதுமக்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றுக் கொள்ளுமாறும் நாளை முதல் பணிகள் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தனர்.