தஞ்சை கீழவாசலில் இருந்த மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டு கொண்டிராஜ பாளையத்தில் தற்காலிக மார்க்கெட் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழவாசலில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக பல்வேறு வசதிகளுடன் ரூ.9.58 கோடி மதிப்பில் புதிய மீன் மார்க்கெட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் கலந்துகொண்டு மீன் மார்க்கெட்டிற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மகனி, உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா,கலையரசன், கவுன்சிலர்கள் உஷா, அண்ணா. பிரகாஷ், ஷெரீப் , காந்திமதி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய மீன் மார்க்கெட் 5200 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளத்துடன் அமைய உள்ளது. தரைத் தளத்தில் இருசக்கர வாகனங்கள் 95, நான்கு சக்கர வாகனங்கள் 28 ஆகியவற்றை நிறுத்திக் கொள்ளலாம். மேலும் லாரிகளை நிறுத்துவதற்கு வசதி உள்ளது. முதல் தளத்தில் 71 கடைகள் அமைய உள்ளன. வாகனங்கள் எளிதாக வந்து செல்ல வசதி ஏற்படுத்தப்படும். பல்வேறு நவீன வசதிகளுடன் மீன் மார்க்கெட் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.