Skip to content

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் இலங்கை மலையக இலக்கியம் – 200 என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்து வந்த்து. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் இலங்கை மலையகம் 200 மாநாடு” நடைபெறவுள்ளது என பல்கலைக்கழக துணைவேந்தர் வி. திருவள்ளுவன், இலங்கையின் இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் துணைத் தூதர் (கண்டி/யாழ்ப்பாணம் துணைத் தூதரகங்கள்) ஆ. நடராஜன், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன் ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.

மேலும், இந்தியாவிலிருந்து இலங்கையில் 1823ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்களின் சமூக, பொருளாதார, இலக்கியப் பின்புலங்களை ஆராயும் வகையில் இலங்கை மலையகம் 200” பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

இதில், இலங்கை, இங்கிலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றும் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கத்தில் கோ. நடேசய்யரின் 75 ஆவது ஆண்டு நினைவுரையை இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெருமாள் சரவணகுமார், இலங்கை மலையகத் தமிழர் வாழ்வியல் குறித்து இங்கிலாந்து தமிழ் எழுத்தாளர் பி.ஏ. காதர், ஆஸ்திரேலியாவின் வழக்குரைஞர் சந்திரிகா சுப்ரமண்யன் ஆகியோர் பேசினர். மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் பச்சை ரத்தம்”என்கிற ஆவணப்படம் திரையிடப்பட்டது. கருத்தரங்கத்தில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைப் பேராசிரியர்கள் ஞா. பழனிவேலு, தெ. வெற்றிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதல் நாள் கருத்தரங்களில் இலங்கை ஊவா மாகாணத்தின் முன்னாள் முதல்வர் எம். செந்தில் தொண்டமான் பங்கேற்று பேசுகையில் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 1823ம் ஆண்டில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக கப்பலில் ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.

லண்டனுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றி இலங்கையில் இறக்கிவிட்டனர். அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் காலரா உள்ளிட்ட நோய்களாலும், சிறுத்தை, பாம்புக் கடியாலும் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களையும் ஒரே பகுதியில் குடியேற்றாமல், பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு விடுதலை கிடைத்தபோது, இலங்கைக்கும் கிடைத்தது. அதன் பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் இருந்த 100 எம்.பி.களில் 7 பேர் மலையகத் தமிழர் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், மலையகத் தமிழர்களைப் பிழைக்க வந்த நாடோடிகள் என்றும், இங்கு வாழத் தகுதியற்றவர்கள் எனவும் இலங்கை அரசு கூறி, குடியுரிமையை ரத்து செய்தது. இதனால், ஒரே நாளில் அனைத்து மலையகத் தமிழர்களும் அகதிகளாக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!