மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி நிர்வாகம், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து திரட்டிய புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்ததில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால் சென்னை மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் மண்டல இயக்குனர் மாஹிம் அபூபக்கர் ஆகியோர் வாயிலாக அனுப்பப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி நிர்வாகம், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு, புடவை, துண்டு, பாய், போர்வை, பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில், பிரட் பாக்கெட், மருந்து பொருட்கள், குளியல் சோப்பு, துணி சோப்பு, குழந்தைகளுக்கான துணிகள், பெரியவர்களுக்கான துணிகள் என மொத்தம் ரூ.2.50 லட்சம் மதிப்பு நிவாரண பொருட்களை தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பொருட்களை வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன், திமுக நகர செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் ஒப்படைத்தனர்.