தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்க மாநில மாநாடு மதுரையில் நடந்தது அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பாரதிய மஸ்தூர் சங்க தஞ்சை மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பாரதிய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளருமான நாகராஜன் தலைமை வகித்தார். டாஸ்மாக் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், 108 ஆம்புலன்ஸ் பொதுச் செயலாளர் ஹரி பிரசாத், போக்குவரத்து கும்பகோணம் மண்டல பொதுச் செயலாளர் வைத்தீஸ்வரன், தஞ்சை மண்டல செயல் தலைவர் பார்த்தசாரதி, மண்டல செயலாளர் செந்தில் வேலன், தஞ்சை மாவட்ட பிஎம்எஸ் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பிஎம்எஸ்-ன் மாநிலத் துணைத் தலைவர் பாலகுமாரன் சிறப்புரை ஆற்றினார். காலியாக உள்ள சுமார் 1500 பணியிடங்களில் தமிழ்நாடு சிவில் சப்ளையர்ஸ் கார்ப்பரேஷனில் பணிபுரியும் நெல் கொள்முதல் பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். 20 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு அனுப்பப்பட்டது. தஞ்சை மாவட்ட தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.