தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் காவிரி டெல்டா விவாசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலைமையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் திருப்பழனம் கிராம ஊராட்சி உள்ளது. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறாத நிலையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறில் எங்கள் பாரம்பரிய திருப்பழனம் ஊராட்சியை சேர்ந்தால் முப்போகம் விளையும் நஞ்சை நிலம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. திருப்பழனம் கிராமத்தை திருவையாறுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் நாங்கள் ஏற்கவில்லை.
மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும்.
தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
எனவே திருப்பழனம் ஊராட்சியில் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.