கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில் அறிஞர் அண்ணா சக்கரை ஆலைத் தலைவர் கந்தவேல் தலைமையில் நடைபெற்றது. இது தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் நாராயணசாமி, சங்க ஆலோசகர் முத்துகிருஷ்ணன், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைய பொருளாளர் பவுன்ராஜ், கந்தர்வகோட்டை விவசாயி சங்க ஒன்றிய தலைவர் சேட்டுத்துறை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், புதுகை மாவட்ட செயலாளர் ராமையன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியில் சங்க துணைச் செயலாளர் சிவனேசன் நன்றியுரை ஆற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடந்த மோடி ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை இரு மடங்காக உயர்ந்தது. சமையல் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்ந்தது. யூரியா பொட்டாஸ் விலை இரு மடங்காக உயர்ந்தது, கரும்பு வெட்டு கூலி இருமடந்தாக உயர்ந்தது. ஒன்றிய அரசு கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு டன்னுக்கு ரூ. 161 மட்டுமே உயர்த்தியது. கடந்த ஆண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 95 மட்டுமே உயர்த்தப்பட்டது. விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. கூட்டுறவுத்துறை மற்றும் பொதுத்துறை ஆலைகளின் எதிர்காலத்தை ஒன்றிய அரசு கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா என கோஷங்களை எழுப்பி தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.