தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி, தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வந்தார். திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு இன்று பிற்பகல் வருகிறார். சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் மாலை 5 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநாட்டு மைய கட்டடத்துக்குச் செல்கிறார்.
அங்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாநாட்டு மைய கட்டடம், ஆம்னி பேருந்து நிலையம், பொலிவுறு பள்ளிகளாக மாற்றியமையக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகள், சூரிய ஒளி மின் நிலையம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்கிற ஸ்டெம் பூங்கா, காந்திஜி வணிக வளாகம், மேம்படுத்தப்பட்ட கருணாசாமி குளம், மேம்படுத்தப்பட்ட அழகி குளம், மேம்படுத்தப்பட்ட பெத்தண்ணன் கலையரங்கம், வணிக வளாகம், தேசிய நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் இருப்போர் தங்கும் அறை உள்பட 14 கட்டடங்களைத் திறந்து வைக்கிறார். பின்னர், புதிதாகக் கட்டப்படவுள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதையொட்டி, தஞ்சாவூர், வல்லம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் தலைமையில் 600}க்கும் அதிகமான காவல் அலுவலர்கள், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.