மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் ஜூன் 6ம் தேதியே காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முன்னோடி விவசாயி அகரமாங்குடி குணசேகரன் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் உள்ள காவிரி, குடமுருட்டி வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, மண்ணியாறு, சுள்ளான் ஆறு, தூரி ஆறு, வடவாறு மற்றும் வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களை நவீனப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும். கிளை வாய்க்கால்களில் ரெகுலேட்டர்கள், பாசன மதகுகள் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை தண்ணீர் வருவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும். இதனால் குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி முறையாக கிடைக்கும். எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு முழுமையாக தூர்வாரும் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.