தஞ்சாவூர் – மன்னார்குடி நெடுஞ்சாலையில் மன்னார்குடி பிரிவு சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர தள்ளுவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அந்த மாற்றுத்திறனாளி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ்-ல் இருந்தவர்கள் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு தாலுகா போலீசார் விரைந்து சென்று இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த வாகனம் மோதியது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.