தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். காய்கறி கடை நடத்தி வரும் இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள், 7 மகன்கள் உள்ளன. இந்த 7 மகன்களுக்கும் திருமணமாகவில்லை. இவரின் மகன்களில் ஒருவரான ராஜா (36) என்பவர் ஆட்டோ ஓட்டுகிறார்.
இந்நிலையில் ராஜாவின் தம்பி முருகேந்திரன் (27) என்பவருக்கும் ராஜாவிற்கும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தம்பி முருகேந்திரன் அண்ணன் ராஜாவை செங்கல்லால் தலையில் அடித்து படுகாயத்தை ஏற்படுத்தினார். இதில் ராஜா வீட்டிலேயே இறந்து விட்டார். இதையறிந்த வீட்டில் உள்ளவர்கள் வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார் என பொய்யான புகாரை கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தந்தனர். அதன் அடிப்படையில் கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் ராஜாவின் இறப்பு இயற்கைக்கு மாறாக இருந்ததால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர் கூறியதன் அடிப்படையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் போலீசார் மீண்டும் விசாரணை செய்ததில் இறந்த ராஜாவின் தம்பி முருகேந்திரன் தான் இவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் இறந்த ராஜாவின் தம்பி முருகேந்திரனை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து நேற்று காலை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அண்ணனையே தம்பி அடித்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.