தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் ஜூலை 14ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்களுக்காகத் தனி அரங்கம் அமைக்கப்பட்டதில்லை. எனவே, தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தனி அரங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தது.
நிகழாண்டு இக்கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு நிகழாண்டு தஞ்சாவூர் படைப்பாளர்களின் நூல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள தனி அரங்கம் (எண் 28) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 101 எழுத்தாளர்கள் 250 தலைப்புகளில் எழுதிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கை பொது நூலகத் துறை அலுவலர்கள் பராமரித்து வருகின்றனர். இது மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சை ப்ரகாஷ், தஞ்சாவூர்க் கவிராயர் உள்பட புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அய்யாறு புகழேந்தி, வல்லம் தாஜூ பால், பிரேமசாயி, கலைவேந்தன், குழந்தைசாமி, சசி, குமார், அகிலா கிருஷ்ணமூர்த்தி, திருநாவுக்கரசு, மாரிமுத்து, பாஸ்கர், ராஜவேல் உள்ளிட்டோர் எழுதிய நூல்களும் இடம்பெற்றுள்ளன.