தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் அமைந்துள்ளது வளவண்ட அய்யனார் கோயில். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் 18 பட்டிக்கு சொந்தமான கோயில் ஆகும். இக்கோயிலில் உள்ள முக்கிய பொறுப்புகளில் முத்தரைய சமூகத்தினர் அதிகம் அங்கம் வகிக்கின்றனர். ஆண்டுதோறும் இக்கோயில் திருவிழா பத்து நாட்கள் விமர்சையாக நடப்பது வழக்கம்.
இத்த திருவிழாவின் போது பூத்தட்டு எடுப்பது வழக்கம் இல்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மற்றொரு சமூகத்தை சேர்ந்த மக்கள் பூத்தட்டு எடுத்து வந்தனர். இதனால் தாங்களும் பூத்தட்டு எடுக்க வேண்டும் என்று
அய்யம்பட்டி சேர்ந்த மக்கள் முத்தரையர் சமூகத்தை ஊர் அம்பலத்திடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கடந்த 28ம் தேதி 18 பட்டியை சேர்ந்த அம்பலங்கள் முன்னிலையில் கூட்டம் நடந்துள்ளது. அதில் 18 பட்டி அம்பலங்களும் அய்யம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பூத்தட்டு எடுத்து வரலாம் என்று அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அய்யம்பட்டி மக்கள் பூத்தட்டு எடுக்கக்கூடாது என்று தடுத்ததாக தெரிய வருகிறது.
இருப்பினும் 28-ம் தேதி இரவு அய்யம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு பூத்தட்டு எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்துள்ளனர். அப்போது போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கிராம மக்களை தடுத்துள்ளனர். இதில் இரு தரப்பிற்கு மத்தியில் வாக்குவாதம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அய்யம்பட்டி கிராம மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததாகவும், இதில் இரண்டு பேரு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் அய்யம்பட்டி வடக்கு தெரு, கீழத் தெருவை சேர்ந்த மகாலிங்கம் (48), கருணாநிதி (60, சதீஷ் (37), ஐயப்பன் (25, சாமிநாதன் (20) உட்பட 10 பேரை போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து தமிழர் தேச கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து ஜி, வீர முத்தரையர் சங்க தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். இது குறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் பிடித்துச் சென்ற 10 பேர் மீது எவ்வித வழக்கும் பதியாமல் அனுப்ப வேண்டும். அய்யம்பட்டி கிராமத்திலிருந்து போலீசாரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கா விடில் முத்தரையர் மக்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.