Skip to content

தஞ்சை அருங்காட்சியத்தில் தான் கலை- பண்பாடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது….. அமைச்சர் ராமச்சந்திரன்..

இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது.. தஞ்சாவூருக்குதான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். கடந்த 2018 -19ம் ஆண்டுகளில் 1.80 கோடி பேர் தஞ்சாவூருக்கு வந்தனர். இதே அளவில் 2019 ஆம் ஆண்டிலும் வருகை தந்தனர். அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.

கடந்த ஆண்டு 65 லட்சம் பேர் வந்து சென்றனர். நடப்பாண்டு கடந்த 4 மாதங்களில் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே நடப்பாண்டு இறுதிக்குள் தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும். சுற்றுலா பயணிகளின் வருகை

மூலம் கிடைக்கும் தொகை சாதாரண கடைகள், ஏழைகள், வழிகாட்டிகள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொடர்புடைய தொழில் செய்து வரும் அனைவருக்கும் சென்று சேர்கிறது. இதனால் தனி மனித வருவாய் உயர்கிறது.

தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இயற்கையாகவே கோயில்களின் எண்ணிக்கை அதிகம். அனைத்து கோயில்களிலும் உள்ள கலை நுணுக்கங்கள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்திலுள்ள கோயில்களில் இருக்கும் சிற்பக்கலை போல வேறு எங்குமே பார்க்க முடியாது.

மருத்துவச் சுற்றுலா தொடர்பாக ஏப்ரல் மாதத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 22 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் கிடைக்கிறது. அடுத்த முறை இன்னும் அதிகமான நாடுகளில் இருந்து வருவர் என எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகப் பொது மேலாளர் பாரதிதேவி, திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் கே. நெல்சன், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் எஸ். முத்துக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதையடுத்து தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மகால் நூலகம் உட்பட இடங்களில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *