தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நாளை 26ம் தேதி மாலை தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே. வாசன் தலைமை வகிக்கிறார். இவ்விழாவை துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, இரவு 7 மணிக்கு காயத்ரி வெங்கட்ராமன் பாட்டு, 7.20 மணிக்கு கணேஷ், குமரேஷ் வயலின் டூயட், 8 மணிக்கு ஜெயந்தி குமரேஷ் வீணை, 8.20 மணிக்கு குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா பாட்டு, 8.40 மணிக்கு ஷோபனா விக்னேஷ் பாட்டு, 10 மணிக்கு திருமானூர் கணேசன், கருணாநிதி குழுவினரின் நாகசுரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
வரும் ஜனவரி 30ம் தேதி வரை நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், ஜனவரி 27 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ராஜேஷ் வைத்தியா வீணை, 9.30 மணிக்கு சவிமியா பாட்டு, 28 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் பாட்டு, 8.20 மணிக்கு ஓ.எஸ். அருண் பாட்டு, 9.40 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரம் பாட்டு, 29 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மஹதி பாட்டு, 8 மணிக்கு சுதா ரகுநாதன் பாட்டு, 8.40 மணிக்கு காயத்ரி கிரீஷ் பாட்டு, 9 மணிக்கு திருவனந்தபுரம் கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் பாட்டு, 30 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு சிக்கல் குருசரண் பாட்டு, 8.20 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் பாட்டு, 9.20 மணிக்கு கடலூர் ஜனனி பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
ஜனவரி 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெறவுள்ளது. இதில், ஆயிரத்துக்கும் அதிகமான கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர்.