தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியில் கூறியதாவது…. “குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் உச்ச நீதிமன்றம் செல்ல முடியவில்லை. நிச்சயம் உச்சநீதிமன்றம் குக்கர் சின்னத்தை ஒதுக்கி இருக்கும். தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்கு மிக்க மேஜிக் சின்னமாக இருந்தது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்துக்கான செல்வாக்கு குறைந்துவிட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 – 10,000 வாக்குகள் மட்டுமே இபிஎஸ் தரப்பு பெற முடியும். இரட்டை இலையை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது ஊரறிந்த உண்மை.
இரட்டை இலை இபிஎஸ்-ஐ சார்ந்து இருக்குமேயானால் தமிழ்நாட்டில் செல்வாக்கை இழக்கும். ஏனென்றால் அதிமுகவை ஒரு பிராந்திய கட்சியாக எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்றுவிட்டார். தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து 12-ந் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.