தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடப்பதாக, போலீசாருக்கு பல்வேறு புகார்கள் பதிவானது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார்.
அதன்படி, கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ் குமார் தலைமயைில், தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை எஸ்.ஐ., கீர்த்திவாசன், எஸ்.எஸ்.ஐ., ராஜா, செல்வகுமார் அடங்கிய குழுவினர், வழிப்பறி கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வந்தனர். மேலும், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில், மனஞ்சேரி பகுதியை சேர்ந்த மூர்த்தி,23, பெருமாண்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன்,22, சந்தனாள்புரத்தை சேர்ந்த பிரசாந்த்,23, ஆகிய மூவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் ஒரு டூ வீலர், இரண்டு மொபைலை திருடிக்கொண்டு வந்தது தெரிந்தது. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கும்பகோணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு மூவரையும் கைது செய்தனர்.