உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039-வது சதய விழா இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது.
இன்று காலை 8.30 மணிக்கு இறைவணக்கம் அதை தொடர்ந்து மங்கள இசை, திருமுறை அரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்குகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரை ஆற்றினார். தொடர்ந்து பழனி ஆதீனம் குரு மகா சன்னிதானம் சீர் வளர்சீர் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார். தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வரலாறாக வாழும் மாமன்னன் இராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் பழங்கால
இசைக்கருவிகளோடு 1039 நாட்டிய கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பன்முக இராசராசனை பாடுவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. பின்னர் இரவு 8 மணி அளவில் மாமன்னன் ராசராச சோழனின் நிலைத்த பெரும் புகழுக்கு காரணம் அவரது நிர்வாகப் பணியா? கலைப் பணியா ? என்ற தலைப்பில் தமிழ் இனிமை பட்டிமன்றம் நடைபெற உள்ளது. இரவு 9.30 மணியளவில் நவீன தொழில்நுட்பத்தில் சதய நாயகன் ராசராசன் என்ற வரலாற்று நாடகம் நடக்கிறது.
விழாவில் இரண்டாம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு மங்கள இசை உடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதன் பின்னர் கோவில் பணியாளர்களுக்கு ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் புத்தாடை வழங்குகிறார். அதன் பின்னர் மாமனன் ராசராச சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு கட்சி,அமைப்பு, இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கின்றனர். காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜ வீதிகளில் திருஉலா நடைபெறும். அதன் பின்னர் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பிற்பகலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும். மாலை 4 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தேவார பண்ணிசையும் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு “உலகம் வியக்கும் மாமன்னன் ராசராசன் ” 1039 கலைஞர்கள் பங்கு பறும் சிறப்பு நாட்டியம் நடைபெறும். 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கும். இரவு 7 மணிக்கு மாமன்னர் ராசராசன் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். சதய விழா காணவரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.