தஞ்சாவூர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் ஏ.சாமியப்பன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கி, அரசு நிர்ணயிக்கும் முழு கூலியை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை சரியாக கணக்கெடுத்து அவர்களுக்கு ஆண்டுமுழுவதும் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி ஆணையரிடம் மாற்றுத்திறனாளிகள் 100 நாள் பணியில் வேலை வழங்க கோரி அதர்கான மனுக்களை வழங்கினர்.
