தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அடுத்த கோட்டூர் (கஞ்சனூர் அருகில்) கிராமத்தில் சாலையோரம் காசி விசாலாட்சி அம்பாள் உடனாகிய அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக் கோயில் உள்ளது. இது மேற்கு பார்த்த சிவாலயம் ஆகும்.
இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள இத் திருக்கோயிலானது பழமையானது. தற்போது சிதிலமடைந்து இடிப் பாடுகளுடன் காணப்படுகின்றது. இந் நிலையில் பூஜைக்கு கூட வழியில்லாமல் இருந்த இந்த ஆலயத்தின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமுதா தினமும் ஆலயத்தை தூய்மையாக பராமரித்து வருவதுடன் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக பூஜை செய்து வருகிறார்.
இது குறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் கருத்து கூறும் போது…. பூஜைக்கு அர்ச்சகர் இல்லாத சிவாலயங்களில் பெண்கள் பூஜை செய்யலாம் என்றார்.
இது குறித்து அமுதா கூறும் போது….
வருமானம் இல்லாத கோயில் என்பதால் அர்ச்சகர்கள் பூஜை செய்யத் தயங்கினர். முதலில் நான் பூஜை செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டனர். பெண்கள் சிவன் கோயிலில் பூஜைச் செய்தால் பாவம் வந்து சேரும் என்று சில பேர் சொன்னார்கள். ஆனாலும் பூஜை இல்லாமல் கோயில் பூட்டி கிடப்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பாவமே வந்தாலும் எனக்குத் தானே வருகிறது, பரவாயில்லை. ஆனால் இன்று எவ்வளவோ பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். எனவே தொடர்ந்து கோயிலில் விளக்கேற்றி, பூஜை செய்து வருகிறேன் என்றார்.