தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அந்த மீன் மார்க்கெட்டில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஆனால் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை முதலே பொதுமக்கள் மீன் வாங்க மீன் மார்க்கெட் திரண்டனர். அங்கு நாட்டு வகை மீன்கள் மற்றும் கடல் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கெண்டை மீன் ரூ.200கும், விரால் மீன் ரூ. 400க்கும், சங்கரா மீன் ரூ. 300க்கும், நண்டு – ரூ.300, 350, இறால் ரூ.300 விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை வரை ஆடிப்பெருக்கை முன்னிட்டு ரூ. 80 லட்சம் அளவிற்கு மீன்கள் விற்பனை நடந்துள்ளது. இது
குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், சென்ற ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு வியாபாரம் குறைவாக உள்ளது. இந்த தற்காலிக மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. கழிவுநீர் ஓடுவதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கின்றது.
இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லை. போதிய வசதி இல்லாததால் பொதுமக்கள் மீன் வாங்க வருவதற்கு அச்சப்படுகின்றனர். சாலையிலேயே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பேருந்துகள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி சார்பாக புதிய மீன் மார்க்கெட் கட்டி வருவதை விரைவில் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.