முதல் காட்சியிலேயே ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள் சுப்ரமணியை(பசுபதி)அறிமுகம் செய்து வைக்கிறார்கள். எதையும் வித்தியாசமாக செய்து உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் நபராக சுப்ரமணியை காட்டியிருக்கிறார்கள்.
அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி தங்கபொண்ணுக்கு(ரோகிணி) 4 மகள்கள், ஒரு மகன். அந்த மூதாட்டி திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விடுகிறார். பேராசை பிடித்த மகள்கள், குடிகார மகனின் தொல்லை தாங்க முடியாமல் தங்கபொண்ணு கிராமத்தை விட்டுச் சென்றதை கண்டுபிடிக்கிறார் சுப்ரமணி.
புதுமுக இயக்குநரான ராம் சங்கையா தான் உருவாக்கிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்ல கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். அவரின் உலகம் புரியத் துவங்கியதுமே சில கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நாம் பயணிக்கிறோம். அவர்களின் காமெடியில் புதுமை இருக்கிறது.
இரண்டாம் பாதி முழுவதும் தண்டட்டியை கண்டுபிடிப்பதை பற்றியே செல்கிறது. அந்த தண்டட்டிக்கு பின்னால் இருக்கும் கதையை இயக்குநர் முன்பே கூறிவிட்டதால் நம்மையும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. நிலைமை சீரியஸாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் காமெடி ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி திருப்திகரமாக இல்லை. இயக்குநர் வைத்த டுவிஸ்ட் தேவையில்லாதது. குடிகாரராக விவேக் பிரசன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கபொண்ணுவின் மகள்களாக நடித்த பூவிதா, தீபா சங்கர், ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோர் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். கான்ஸ்டபிளாக சிறப்பாக நடித்திருக்கிறார் பசுபதி. படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு தேவையான ஒன்று அன்பு அதை கொடுத்தால் போதும். மொத்தத்தில் காசுக்காக அவர்களை தேடாதீர்கள் அன்பால் தேடுங்கள் என்பதை படம் எடுத்துரைக்கிறது.