தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கரைமீண்டார் கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (36). மாற்றுத்திறனாளி. இவர் கரைமீண்டார் கோட்டை ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு துரைராஜை வேலையில் இருந்து நிறுத்தி விட்டனராம். பணத்தை திருடியதாக கூறி வேலையில் இருந்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் மீது வீண் பழி சுமத்தி வேலையை விட்டு நீக்கி விட்டனர். எனவே மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே 2 முறை மனு அளித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனமுடைந்த துரைராஜ் மண்எண்ணெய் பாட்டிலுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக வாசலில் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் துரைராஜை சோதனை செய்தபோது அவரிடம் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது தெரிய வந்தது. உடன் அந்த பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் துரைராஜை, கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அழைத்துச் சென்றனர். அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் என்மீது திருட்டுபட்டம் கட்டி, வீண்பழி சுமத்தி பணியில் இருந்து நிறுத்தி உள்ளனர். எனவே எனக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.