மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து 30 நிமிடம் பேசினார். சந்திப்பு முடிந்து வெளியே வந்த தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் அரசியல் பேசவில்லை. தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்காக சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இதே கோரிக்கைக்காக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள அனைத்து கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேசி உள்ளோம்.
இதற்காக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினால் அவர் ஒப்புதல் தரமாட்டார் என்பது தெரியும். அதே நேரத்தில் அமைச்சரவை தீர்மானத்தை வைத்து உச்சநீதிமன்றம் மூலம் விடுதலை பெற முடியும். ராஜீவ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலைபோல இவர்களையும் விடுவிக்க வேண்டும். டிசம்பர் இறுதியில் கட்சியின் நிர்வாகிகள் கூடி மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிப்போம்.
தண்டனை முடிந்தும் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்காகவும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.