Skip to content

பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்

தமிழ்நாட்டில்  கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இந்த விழா இன்று  தமிழகத்தின்  அனைத்து  முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் இந்த விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

 முருகனின் மூன்றாம் படை வீடான, திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். இத்திருவிழாவிற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வ ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு  தைப்பூசத்திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம்  நேற்று  இரவு நடந்தது.  தைப்பூசத்தின்  சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம்  இன்று  மாலை 4.45 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 14ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். அன்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா  நிறைவடைகிறது.

தைப்பூசத் திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பழநி நகரை நோக்கி வந்து கொண்டுள்ளனர். இதனால் பழநி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம் மற்றும் உடுமலை சாலைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிக்கின்றனர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 5மணிநேரம் வரை  பக்தர்கள் காத்திருந்து  தரிசனம் செய்து வருகிறார்கள்.

தைப்பூச விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழநிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவாா்கள்.   பாதயாத்திரை  வரும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுபோல திருச்செந்தூர்,  திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை  என அனைத்து  படைவீடுகளிலும்  இன்று  தைப்பூச விழா விமரிசையாக நடந்து வருகிறது.  திருச்சி  அடுத்த  வயலூர்  முருகன் கோவிலிலும் தைப்பூச விழா  இன்று கோலாகலமாக நடந்து வருகிறது.

 

error: Content is protected !!