திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலம் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
தைப்பூச விழாவையொட்டி கோயில் நேற்று 26ம் தேதி உள் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்திற்கு சிவாச்சாரியர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய தைப்பூசக் கொடியினை ஏற்றி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து மரசிம்ம வாகனத்தில் கடைவீதியில் இருந்து வீதி உலாந்து சமயபுரம் கோவில் சென்று அடைந்தது. இரண்டாம் நாளான இன்று வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகாதீபாரணைக்கு பின்பு புறப்பாடாகி கடை வீதி, தேரோடும் வீதி வழியாக சமயபுரம் கோவிலில் சென்றடைந்தது, வழிநெடிகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 11 நாட்கள் உற்சவ அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதி உலா நடைபெறும்.
10 ம் நாளான பிப்ரவரி 4 ம் தேதி காலை 8 மணிக்குள் சமயபுரம் மாரியம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி மண்ணச்சநல்லூர், நொச்சியம் வழியாக திருக்காவிரி சென்றடைதலும், மாலை 3 மணிக்கு தீர்த்த வாரி கண்டருளுதலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்ச்சியும், இரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகமும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
11 ம் நாளான 5 ம் தேதி காலை 6 மணிக்கு வடதிருக்காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக நடைபாதை உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு அஸ்தான மண்டபம் வந்தடைந்த பின்னர், இரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று திருக்கோயில் நடை சாத்துதல் நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மண்டகப்படி ஆறுமுக உடையார், மற்றும் டி.ஆர். வெங்கடேசன் செய்திருந்தனர்.