தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாராசுரம் மார்க்கெட்டில் நாள்தோறும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் காய்கறி மார்க்கெட்டின் முன் பகுதியில் ஏராளமான சில்லறை வியாபாரிகள் தகர கொட்டகை அமைத்து காய்கறிகள், வாழைப்பழம், வாழை இலை உள்ளிட்டவைகளை சில்லரை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாநகராட்சிக்கு நாள்தோறும் சில்லறை வியாபாரிகள் வரி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வளாகத்தில் சில்லறை வியாபாரிகள் அமைத்திருந்த தகர கொட்டகை யை அகற்ற முயற்சி செய்தனர். அப்போது சில்லறை காய்கறி வியாபாரிகள் தாங்கள் அமைத்துக்கொண்ட தகர சீட்டுகளை தங்கள் சொந்த செலவில் அகற்றி கொள்வதாக மாநகராட்சி அதிகாரி சிவராமனிடம் உத்திரவாதம் அளித்தனர். இதை அடுத்து கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சில்லறை வியாபாரிகள் அவர்கள் அமைத்துக்கொண்ட தகர சீட்டுகளை அகற்றிக் கொண்டனர்.
இது குறித்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் கூறுகையில்…. காய்கறி மார்க்கெட்டின் உள்ளே ஏராளமான வியாபாரிகள் மாத வாடகை செலுத்தி கடைகளை வாடகைக்கு எடுத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களை போன்ற சிறு வியாபாரிகள் நாள்தோறும் தினசரி மாநகராட்சிக்கு வரி செலுத்தி எங்களது வியாபார பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். மழை மற்றும் வெயிலில் இருந்து காய்கறி உள்ளிட்ட விற்பனை பொருட்களை பாதுகாக்க தகர சீட்டுகளை அமைத்து மறைவு ஏற்படுத்தியிருந்தோம். இந்த நிலையில் உடனடியாக தகர சீட்டுகளை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே எங்கள் வியாபாரம் தொடர்வதற்கு மாநகராட்சியும், அரசும் வழிவகை செய்ய வேண்டும் என கூறினர்.