Skip to content
Home » திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…

திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…

  • by Authour

திருச்சியில் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இரண்டு கட்டங்களாக 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல் கட்ட மேம்பாட்டிற்காக 50 கோடி ரூபாய் செலவில் 47 ஏக்கர் நிலத்தில் பணிகள் அனைத்தும் தொடங்க நிலம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அந்த இடத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணிகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படும். இதேபோல் இந்த இலந்தைபட்டி பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் மற்றும் அதன் அருகே உள்ள சூரியூர் பகுதியில் சிறைச்சாலையும் வர இருக்கிறது.

இந்நிலையில் பல்வேறு திட்டங்களுடன் ஒலிம்பிக் அகாடமியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து கால்பந்து மைதானம், 400 மீட்டர் ஓடுதளம் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்விளையாட்டரங்கமாக கூடைப்பந்து, பேட்மிண்டன், வாலிபால் போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் முதற்கட்ட பணியில், 50 மீட்டர் தூரத்திற்கு நீச்சல் குளம், ஹாக்கி மைதானமும் அமைக்கப்படும். மேலும் வீரர்களுக்கு சொல்லி கொடுக்கும் வகுப்பறைகளும் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் முதற்கட்டப்பணிகளில் நீச்சல் குளமானது சர்வதேச தரத்துடன் அமைக்கப்படும். வாகன நிறுத்துமிடம், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என இவை அனைத்தும் முதற்கட்ட பணிகளில் அடங்கும். வருவாய்துறை சார்பில் ஏற்கனவே நிலமானது விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 18 மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டாம் கட்டத்தில் சைக்கிள் டிராக், ஹாண்ட் பால் கோர்ட், டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் மைதானம், டோர் ஆர்ச்செரி மற்றும் டைவிங் போன்றவை அமைக்கப்படும். வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தேவைக்காக 30 ஏக்கர் நிலத்தையும் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *