மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றுவிட்டதாகவும், மருத்துவமனையை 33 மாதங்களில் முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.