Skip to content
Home » கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

பாலக்கோடு அருகே கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 15-ந் தேதி கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், 16-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அப்பகுதியில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் வைத்து திருவீதி உலா வந்தது. அப்போது அந்த ஊர்வலத்தின்போது பின்தொடர்ந்து வந்த ஒரு மினி சரக்கு ஆட்டோவில் ராக்கெட், 5 ஆயிரம் வெடி சரம் உள்ளிட்ட பட்டாசுகள் வைத்து அதனை வெடித்து வந்தனர். சாமி ஊர்வலத்தில் முன்னே வாணவேடிக்கை காட்டுவதற்காக ராக்கெட் பட்டாசை பற்ற வைத்து மேலே பறக்க விட்டனர். அப்போது அந்த பட்டாசு வெடித்து அதில் இருந்து தீப்பொறி மினி சரக்கு ஆட்டோவில் வைத்திருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.

இதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் மளமளவென வெடிக்க தொடங்கியது. இதனால் சாமியுடன் வந்த பக்தர்கள் பயந்து பதறி அடித்து ஓடத் தொடங்கினர். இந்த வெடிவிபத்தில் கருப்பாயி கொட்டாயை சேர்ந்தவர்கள் மாதேஷ் மகன் விஜயகுமார் (21), சுப்பிரமணி மகன் பரசுராமன் (27), திருப்பதி மகள் யாசிகா (6), கார்த்திக் மகள் பிரதிக்ஷனா (7), அழகேசன் மகன் தர்ஷன் (6), நாகராஜ் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து காயமடைந்த 6 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 6 பேரையும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் யாசிகா என்ற குழந்தையின் உடல் நிலை மோசமானதால் உடனே மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகுமார் என்பவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிவிபத்து நடந்த சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடிவிபத்து நடந்து 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பட்டாசு வெடித்ததால் நடந்ததா? அல்லது ஓட்டலில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்து நடந்ததா? என்ற சந்தேகத்திற்கு விடைகிடைக்காத நிலையில் தருமபுரி பாலக்கோட்டில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!