அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாக பூஜைகள் 18ம் தேதி தொடங்குகிறது. கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகுறது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குலுக்கல் மூலம் 2,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். முன்பதிவுக்கு பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போட், வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, தேசிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும். மேலும் செல்போன் எண்ணுடன் மின் அஞ்சல் முகவரி இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும். 21ம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு அந்த எண் அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். குறுந்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் 23ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கட்டணமில்லா சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.