தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. பாபநாசம் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் சுந்தரம், திருவாரூர் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தலைவர் கருணாநிதி வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் பூசாரிகள் ஓய்வூதியத் தேர்வு உறுப்பினருமான வாசு கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசும் போது தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில் திருப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கும் ரூபாய் 2 லட்சம் திருப்பணி நிதிக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் . தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள திருக் கோயில்களுக்கு தமிழக அரசு 2 லட்சம் திருப்பணி நிதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நிதி சுமார் 2500 திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் கட்டுமான பொருட்களின் கடும் விலை உயர்வு காரணமாக இத்தொகை போதுமானதாக இல்லை, இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி 18 சதவீதம், செனட்டேஜ் 2 சதவீதம், தொழிலாளர் நலநிதி 1 சதவீதம் உட்பட மொத்தம் 21 சதவீதம், அதாவது ரூபாய் 2 லட்சம் திருப்பணி நிதியில் சுமார் ரூபாய் 40 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது. இதனால் திருக்கோயில் திருப்பணிகளை முழுமையாக செய்து முடிக்காமல் அரைகுறையாக முடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பக்தர்களும், பொதுமக்களும் திருக்கோயில் திருப்பணியை செய்து முடிக்க இயலாமல் தவித்து வருகின்றனர் என்றார்.
கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேறின….
தமிழ் அர்ச்சனை கையேடுகளை அனைத்து பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும்.
கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்தி, நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத் திட்டம் வழங்க வேண்டும். உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேறின.
புதிதாக பொறுப்பாளர்கள் நியமனம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனைக் குழு தலைவராக பழனிசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக ராஜேந்திரன், செயலராக முருகேசன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவராக கருணாநிதி, வடக்கு மாவட்ட செயலராக பாண்டித்துரை, துணைச் செயலராக சந்திரசேகரன் சுவாமிகள், மாவட்ட ஆலோசனைக் குழு துணை தலைவராக தங்கமணி ஆகியோர் ஒருமனதாக தேர்வாகினர். பாண்டித்துரை நன்றி கூறினார்.