பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார். ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரகா ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தாரகா ரத்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக தாரகா ரத்னாவை பெங்களூரு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. தாரகா ரத்னா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு நாட்களுக்கு பிறகே அபாய கட்டத்தை தாரகா ரத்னா தாண்டுவாரா என்பதை சொல்ல முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். தாரகா ரத்னா உடல்நிலை குறித்து அவரது மாமாவும் நடிகருமான பாலகிருஷ்ணா கூறும்போது, ”தாரகா ரத்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் வால்வுகளில் அடைப்பு உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள்” என்றார். தாரகா ரத்னாவுக்கு 39 வயது ஆகிறது. 2002-ம் ஆண்டு வெளியான ஒகடோ நம்பர் குர்ராடு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தாரக், பத்ரி ராமுடு, மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.