நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்துகிறது.
இந்த நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. சரவணனும், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் தனிப்படை எஸ்.ஐ சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன், சந்தானகுமார் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் தான் பல்வீர்சிங், பல்பிடுங்கும் செயலுக்கு துணைபோனவர்கள். இப்படி செய்தால் தான் உங்களைக்கண்டு பயப்படுவார்கள். நீங்கள் பெரிய ஹீரோ ஆகலாம் என உசுப்பேற்றி விட்டவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.