திருச்சி காஜா பேட்டை பகுதி புதுத் தெரு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் சுரேஷ். இவருக்கு சுமன் (வயது18), சுதன், சுனில் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சுனில் பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 10 ந்தேதி மாலை சுமன் தனது நண்பர் அஷ்ரப், உஸ்மான் உள்ளிட்ட 8 பேருடன் முக்கொம்பு காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அஷ்ரப் தண்ணீரில் மூழ்கினார். சுமன் தண்ணீரில் குதித்து அஷ்ரப் உஸ்மானை காப்பாற்ற முயற்சித்தார். மற்ற நண்பர்களும் தண்ணீரில் குதித்து அஷ்ரபை உயிருடன் மீட்டனர். அவர்கள் புறப்பட்டபோது சுமன் மாயமானது தெரிந்தது. மேலும் சுமன் சூழலில் சிக்கியிருக்கிறார் என்று அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் மற்றும் திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சுமார் 2 மணி நேரமாக சுமன் உடலை தேடினர். ஆனால் உடல் கிடைக்க வில்லை. இந்நிலையில் நேற்று காலை முக்கொம்பு அருகே திண்டுக்கரை பகுதியில் சுமன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.தகவல் அறிந்து ஜீயபுரம் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த சுமன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவிரி ஆற்றில் மூழ்கிய நண்பனை காப்பாற்ற சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.