Skip to content
Home » மலேசிய விமானத்தில் தொழில்நுட்பகோளாறால் மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பு…

மலேசிய விமானத்தில் தொழில்நுட்பகோளாறால் மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பு…

திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணம் ரத்து செய்யப்பட்டு விமானம் திருச்சியிலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சியிலிருந்து மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.10 க்கு (நேற்று அதிகாலை) புறப்பட வேண்டும். புறப்படும் நிலையில் விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். பின்னர் விமானம் நிறுத்தப்பட்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள் கோளாறை சீரமைக்கும் முயற்சியில் இறங்கினர். மணி 1.30 ஐக் கடந்த நிலையிலும் கோளாறை சீராக்க இயலவில்லை. இதனையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்தது. விமானத்திலிருந்த 152 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, சிறிது நேரம் விமான நிலைய ஓய்வறையிலும் பின்னர் அருகில் உள்ள தனியார் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று காலை 10 மணிக்கு மலேசியாவிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் 22 பேர் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பிற்பகல் 4 மணிக்கு வந்த மற்றொரு மாற்று விமானத்தில் மற்ற பயணிகள் 132 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மாற்று விமானத்தில் வந்த தொழில் நுட்ப வல்லுநர்கள், கொண்டு வரப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டு விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறை சீராக்கும் முயற்சியில் இரவு வரை தொடர்ந்து ஈடுபட்டனர்.