நண்பர்கள், உறவினர்கள் உயிரிழந்துவிட்டால், கண்ணீர் அஞ்சலி பேனர் வைப்பார்கள், இதன் மூலம், அவர் இறந்துவிட்டார் என்று பலருக்கும் தெரிவிப்பதாகவே அது இருக்கும், ஆனால், திருச்சி மாவட்டத்தில், சாலை விபத்தில் இறந்தவரின் கடைசி நேர புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு பேனர் அமைத்துள்ளனர் அவரது உறவினர்கள். திருச்சி குமரன் நகர் மாரியப்பன் (70) என்ற முதியவர், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்தார்.
கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கும் பேனரையே, தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு போஸ்டராக மாற்றியிருக்கிறார்கள் உறவினர்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்துடன், சாலை விதிகளை கவனமாக பின்பற்றாததாலும், தலைகவசம் அணியாததாலும் ஏற்பட்ட சிறு விபத்து, மாரியப்பன் உயிரைக் குடித்துவிட்டது என்று பேனர் வைத்திருந்தது பல வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதனை பார்க்கும் ஒவ்வொருவரும் பேனர் வைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சாலை விதிகளை மதிக்காமல், தலைக்கவசம் அணியாமலும் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த பேனர் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.