தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பதை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சண்முகாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
எப்பொழுதெல்லாம் ஒன்றிய அரசு அறிவிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி உயர்வினை அளிக்கும் என்று உறுதி அளித்தபடி ஒன்றிய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வினை 1.1.2025 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு 16 லட்சம் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பயன் தரும் அறிவிப்பாகும்.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட சரண் விடுப்பை பல்வேறு ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கையினை ஏற்று இந்த ஆண்டே வழங்கப்படும் என்ற அறிவிப்பு 8 லட்சம் ஆசிரியர் அரசு ஊழியர்கள் பயன்பெறும் அறிவிப்பாகும்.
மிக முக்கியமாக பழைய ஓய்வு திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழுவின் கால அளவை குறைத்து செப்டம்பர் மாதத்திற்குள் அதன் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு பங்கேற்பு ஓய்வு திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர் அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்வி படிப்பிற்கான தொகையினை ரூ 1 லட்சமாக உயர்த்தி வழங்கி இருப்பதும்,
திருமண முன்பணத் தொகை ரூ 5 லட்சமாக உயர்த்தி வழங்கி இருப்பதும் பாராட்டக்கூடிய ஒன்றாகும் என அதில் கூறியுள்ளார். இதனை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் வரவேற்று முதல்வருக்கு நன்றியினை தெரிவித்து வருகிறார்கள்.