திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 5 புதிய வட்டார கிளைகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
1-06- 2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 எனவும்,1-06 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5200 என நியமிக்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு ஊதிய குழுவிலும் ஒரே பதவி, ஒரே கல்வி தகுதி, ஒரே பணி என்று அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்போது இரு வேறு ஊதியங்கள் நிர்ணயம் செய்ததில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பாதிப்பினை விரைந்து களைய முழு ஒத்துழைப்பு அளிக்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். அதன் பொருட்டு இன்று முசிறி, தொட்டியம், தா.பேட்டை மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய 5 வட்டாரங்களில் புதிய கிளைகள் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா மற்றும்
அனைத்து வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கண்ணன் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் அனைத்து பொறுப்பாளருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து எழுச்சி உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ஞானசேகரன், மாநில துணைச் செயலாளர் வேல்முருகன் சிறப்புரை ஆற்றினார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் நவீன்குமார் வரவேற்புரையாற்றினார். விழாவிற்க்கான அனைத்து
ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார் செய்திருந்தார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் நன்றி உரை கூறினார். மாவட்ட துணைத் தலைவர் ரெங்கராஜ், குசேலன் மாவட்ட துணைச் செயலாளர் விஜயராகவன், விஜயகுமார் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி எழிலரசி, திருமதி யோகலட்சுமி, திருமதி கிருஷ்ணவேணி மற்றும் திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியாக சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை வெல்லும் வரை உறுதியாக போராடுவது என்ற தீர்மானத்துடன் விழா நிறைவு பெற்றது.