திருச்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (41). இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வாஞ்சிநாதன் ஊருக்கு செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே சினிமா தியேட்டர் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவரான பெரம்பலூர்-விளாமுத்தூர் ரோடு, சங்குபேட்டையை சேர்ந்த எஸ்ஐ பாண்டியனின் மகன் ஜேம்ஸ்பாண்டி( 19) தான் 10-ம் வகுப்பு படிக்கும்போது தன்னை ஏன் அடித்தாய் என்று ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் கேட்டு, அவரை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து புகாரின் பேரில், எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மேற்பார்வையில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். ஜேம்ஸ்பாண்டி தற்போது பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவரது தந்தை பாண்டியன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.