உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடந்தது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரிலும் கூட்டம் நடந்தது. லட்சுமணப்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கவிதா. இவரது கணவர், மண்டையூர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார். இவர்கள் அயன்புத்தூர் பகுதியில் வீட்டுமனை வாங்கி உள்ளனர்.
அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு கடந்த ஜனவரி மாதம் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஊராட்சி நிர்வாகம் அந்த வீட்டு மனைக்கு செல்லும் வழியில் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளதாக கூறி, அனுமதி கொடுக்க காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராமசபை கூட்டத்திற்கு வந்த கவிதா, ஊராட்சி தலைவரை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி விளம்பர பதாகை ஏந்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் நவல்பட்டு போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கவிதா போராட்டத்தை கைவிட்டார்.