ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன். இவரது மனைவி புவனேஷ்வரி(53), வைராபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதனிடையே கடந்த 20-ம் தேதி வழக்கம் போல் மனோகரன் நடைபயிற்சி சென்று விட்டு வீடு திரும்பிய போது, படுக்கை அறையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் புவனேஷ்வரி இறந்து கிடந்தார்.
வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்படாத நிலையில், அவர் அணிந்திருந்த நகைகள் மட்டும் மாயமாகின. இது குறித்து மனோகரன் அளித்த புகாரின் பேரில், ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பெரிய சடையம்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெயக்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியை புவனேஸ்வரியின் வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு தங்கி இருந்த தனியார் பள்ளி ஆசிரியர் பல்ராம் என்பவருடன் ஜெயக்குமாரின் மனைவி ஒரே பள்ளியில் பணியாற்றி உள்ளார்.
இதனால் பல்ராமிற்கும் ஜெயக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு பணம் கொடுக்கல் வாங்கலில் தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் பல்ராமை சந்திக்க வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற போது கீழ் வீட்டில் வசிக்கும் புவனேஷ்வரியிடம் அதிகளவு நகை இருப்பதை கண்டு திட்டமிட்டு கொலை செய்து ஜெயகுமார் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. தேடுதல் வேட்டை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஆறு சவரன் தாலி செயின் மற்றும் 18 கிராம் நகை உட்பட சுமார் 8 சவரன் நகையை மீட்டனர்.
ஜெயகுமார் பல நபர்களிடம் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்று நெருக்கடியில் இருந்துள்ளார். கடனை அடைப்பதற்காக ஆசிரியையை கொலை செய்ததாக ஜெயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். நகைகளை திருட முயன்ற போது சத்தம் எழுப்பியதால் தலையணையால் அழுத்தியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.