தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி கஸ்தூரி. ஆசிரியை. இவர்களின் மகள் இந்து பாரதி. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி கஸ்தூரிக்கு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிக் கொண்டு சென்னைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கஸ்தூரியின் அம்மா சுசீலா ரெட்டிப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டை திறந்து உள்ளே சென்றவர் பின்பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறை கதவுகள் திறக்கப்பட்டு பீரோவில் இருந்த நெக்லஸ், தோடு, வளையல், ஆரம், காசுமாலை, செயின் என்று 58 பவுன் நகைகள் மற்றும் 5 ஜோடி வெள்ளிக் கொலுசுகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சுசீலா தனது பேத்தி இந்துபாரதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னையிலிருந்து விரைந்து வந்த இந்துபாரதி இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5.89 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.