தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். சிங்கப்பூரில் இன்ஜினியராக உள்ளார். இவருடைய மனைவி கீதா. வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். கடந்த 20ம் தேதி காலை கீதா தனது மகளுடன் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். தொடர்ந்து கீதாவின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து கீதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 48 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கீதா, தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் நகர டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நசீர், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, ஏட்டுக்கள் கோதண்டபாணி, சிவக்குமார், காவலர்கள் அருண்மொழிவர்மன், சையது இஸ்மாயில், திருக்குமரன், விஜயசந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சித்ரா
நகர் பகுதியை சேர்ந்த வீரையன் மகன் வெங்கடேசன் (33) என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வெங்கடேசன் இருந்துள்ளார்.
உடன் அவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்ததில் கொள்ளையடித்த நகைகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆயுதபூஜையன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில் வார்டனாக
பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் வீட்டில் இருந்து 12 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதும் வெங்கடேசன் என்பதும் தெரிய வந்தது. அந்த நகைகளையும் போலீசார் மீட்டு வெங்கடேசனை கைது செய்தனர். மிக வேகமாக விசாரணை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பாராட்டுக்கள் தெரிவித்தார்.