திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி.இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி என்கின்ற பாப்பி (52). இவர் புள்ளம்பாடி அருகே உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள புனித தோமையார் ஆர்.சி .தொடக்கப் பள்ளியில் கடந்த 1999 ம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் 3ம் வகுப்புக்கு பாடம் எடுக்கிறார்.
தற்போது, மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் ஆன்லைன் தேர்வானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
புள்ளம்பாடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தொலைத்தொடர்பு துறையில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத காரணத்தால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த எமிஸ் டெஸ்ட் நடத்துவதற்கு இயலாமல் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியை அன்னாள் ஜெயமேரி மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் ஆன்லைன் தேர்வு நேற்றைய தினம் நடத்தியுள்ளார். அதில் இன்டர்நெட் சரியாக கிடைக்காத்தால் நாட் அசஸ்மென்ட் என்று தகவல் கிடைத்த காரணத்தால் ஆசிரியை டென்ஷனாக காணப்பட்டார். உடனடியாக பள்ளியில் சக ஆசிரியர்களிடம் இது குறித்து அன்னாள் ஜெயமேரி பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். மற்ற ஆசிரியர்கள் , ஜெயமேரி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி பார்த்தனர். அவர் எழும்பவில்லை. பின்னர் நாடித்துடிப்பை பார்த்தபோது துடிப்பது இல்லை. அவர் கீழே விழுந்து உயிரிழந்து விட்டார் என தெரியவந்தது.
வகுப்பறையிலே பள்ளி ஆசிரியை மாணவ மாணவிகள் கண் முன் மயங்கி விழுந்து ஆசிரியை இறந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.