Skip to content
Home » குகேஷ்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சுதா எம்.பி. கோரிக்கை

குகேஷ்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சுதா எம்.பி. கோரிக்கை

  • by Authour

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த குகேஷுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், குகேஷுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கியதோடு, தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும், சாம்பியன்ஷிப் மூலம் குகேஷுக்கு கிடைக்கும் வருமானம் 11.34 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் குகேஷுக்குக் கிடைத்த பரிசுத் தொகைக்கு இந்திய வருமான வரிச் சட்டப்படி அவர் 4 கோடி வரை வரி செலுத்த நேரிடும். இந்த வரி முறையானது விமர்சனத்திற்கு உள்ளானது. எனவே விளையாட்டில் பரிசுத் தொகை பெறும் வீரர்களுக்கு வரிச்சலுகை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,உலக செஸ் சாம்பியனாக குகேஷ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை சுமார் 11 கோடியில் 4 கோடிக்கும் மேல் வரியாக கட்டும் சூழல் உண்டாகியிருக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு வரிச்சலுகை வழங்கியது போல், குகேஷுக்கும் வரிச்சலுகை வழங்கினால் அது இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும்.

அதே போல் குகேஷின் சாதனையை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வழியில் ஒன்றிய அரசும் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். உலக சாதனையை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!