அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சம்போடை அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு டிப்பர் லாரி, முன்னே டிப்பர் லாரி நின்று கொண்டிருப்பது தெரியாமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் டிரைவர்களும் லேசான காயம் அடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறி்த்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், விபத்து நடந்த போது அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் தேவையில்லாமல் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், இதனால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாகவும் தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையின்றி நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.