பெரம்பலூரில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (16.12.2023) தழுதாழை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பள்ளி மாணவ மாணவிகள் டாட்டா ஏஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவதை பார்த்த மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் அந்த வாகனத்தை வழிமறித்து ஓட்டுநரை அழைத்து ஏன் குழந்தைகளை இப்படி அழைத்து செல்கின்றீர்கள் என விசாரித்தார்.
அதற்கு, மாணவர்கள் தழுதாழை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அன்னமங்கலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருவதாகவும் அரையாண்டு தேர்வுக்கு அவர்களை அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். மேலும், இயல்பாக பள்ளி செயல்படும் நேரங்களில் சென்று வருவதற்கு அரசு பேருந்துகள் இருப்பதாகவும் அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் மதிய நேரம் என்பதால் தேர்வு நேரத்திற்குள் பள்ளி செல்ல வேண்டிய காரணத்தால் அழைத்துச்செல்வதாக தெரிவித்தார்.
இதைக்கேட்ட மாவட்ட கலெக்டர், டாட்டா ஏசி போன்ற வாகனங்களில் மாணவர்களை அழைத்துச் செல்வது தவறு. உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இது போன்ற ஆபத்தான முறையில் பள்ளி மாணவ,மாணவிகளை அழைத்துச் செல்வது குற்றம், குழந்தைகள் நலன் கருதி இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கண்டித்தார். மேலும், மாணவர்களை மாற்று வாகனம் ஏற்பாடு செய்து பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.