திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 19ம் தேதி வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 50 வயது மதிக்கத்தக்க 2 விற்பனையாளர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை டி சர்ட், பேண்ட் மற்றும் மாஸ்க் அணிந்த ஒரு வாலிபர் சில சரக்குகளை தருமாறு கேட்கிறார்.
அதற்கு விற்பனையாளர்கள், காசு, காசு என்றனர். இதனால் அந்த வாலிபர் டாஸ்மாக் கடையின் கம்பி வலை மீது பட்டா கத்தியால் ஓங்கி வெட்டினார். பின்னர் கதவை திறந்து கொண்டு கடைக்கு உள்ளே புகுந்தார். கையில் ஒரு அடி நீளமுள்ள பட்டாக்கத்தி வைத்திருந்தார்.
அந்த கத்தியால் சரக்குகள் வைக்கும் மேஜையில் வெட்டினார். பின்னர் அருகில் சரக்கு இருந்த பெட்டியின் மீதும் ஓங்கி வெட்டினார்.
காசு காசுன்னு கேட்குறீங்க…. காசு தரமாட்டோமோ என்றார். இதனால் பயந்து போன ஊழியர்கள் வாங்கி கிடலாம் அண்ணா என்றனர். ஆனாலும் அவர் கோபம் தணியாதவராய், ஒவ்வொரு சரக்குகளிலும் சில பாட்டில்களை எடுத்து வைக்கும்படி கூறினார். அதன்படி விற்பனையாளர்கள் எடுத்து வைத்தனர். அதை வெளியே இருந்த அந்த வாலிபரின் கூட்டாளிகள் வாங்கி வைத்துக்கொண்டனர்.
பின்னர் அருகில் இருந்த பெட்டியில் இருந்து ஒரு பாட்டிலையும் எடுத்துக்கொண்டார். மொத்தம் எவ்வளவு ஆச்சு என கேட்டார் அந்த வாலிபர், அதற்கு 1120 ரூபாய் என விற்பனையாளர் கூறினார். நாளைக்கு தர்ரோம் என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே போய் விட்டார் அந்த வாலிபர்.
அரசு கடையில் புகுந்து வாலிபர் செய்த இந்த அட்டகாசத்தால் விற்பனையாளர்கள் அதிர்ந்து போயினர். ஆனால் அதே நேரம் கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் வாலிபரின் செயல்கள் அனைத்தும் பதிவாகி இருந்தது. அதைக்கொண்டு திருவரங்கம் போலீசார் அந்த வாலிபரையும், அவரது கூட்டாளியையும் இன்று கைது செய்தனர்.