சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.சோதனை நடத்துவதற்கான வாரண்டை காட்டி, வலுக்காட்டாயமாக கையெழுத்து பெற்றதாக தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. சோதனைக்காக வாராண்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு.டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. எந்த ஆதாரங்களும் இல்லாமல் சோதனை நடத்தவில்லை.
சோதனையின் போது அதிகாரிகள் உணவருந்த, ஓய்வெடுக்க அனுமதி வழங்கிய பிறகே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. டாஸ்மாக் அதிகாரிகளின் சுதந்திரத்தை மீறியதாக டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் வழக்கு தொடர முடியும் .
பெண் அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆதாரங்களை சேகரிப்பதற்காக மட்டுமே அதிகாரிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டபூர்வமான சோதனையை முடக்கும் நோக்கில், சட்டவிரோதமாக சிறை பிடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி தமிழக அரசு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.” என அதில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர்.இது மனித உரிமை மீறல் . அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,“தமிழக காவல்துறை சோதனை நடத்தியது இல்லையா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு, “நள்ளிரவில் சோதனை நடத்தியதில்லை” என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார்.அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத் துறை பதில் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு காலஅவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன், நீதிபதி ராஜசேகர் அமர்வில்இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் கே.எம் விஜயன் ஆஜராகி ,டாஸ்மாக் துறையின் அமைச்சரின் வழக்கறிஞர் வழக்கை விசாரிக்கும் நீதிபதி ராஜசேகரின் சகோதரர் என்றும் எனவே இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க கூடாது என முறையிட்டார் இந்த முறையிட்டினை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தொடர்ந்து விசாரித்தனர்.